மாமியாரின் GPAY அக்கவுண்டுஇல் இருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை ஆட்டைபோட்ட ஜெயில் வார்டன்.! என்ன நடந்தது ?

சேலம் சிறை
கடந்த ஒரு ஆண்டாக சிறைத்துறைக்குச் செல்ல வேண்டிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வார்டன் மாமியாரின் செல்போன் எண் மூலமாக ஜிபே அக்கவுண்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிச்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், சாலையோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் என்பவர் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருள்களுக்குரிய பணத்தை சிறைக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து லட்டு, மிச்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய சிறை கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு ஜிபே மூலம் பணம் அனுப்பி வருவதாக கூறினர். இதையடுத்து ஜிபே அக்கவுண்ட் யாருடையது என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போனில் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரியவந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக ஜிபே அக்கவுண்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.