ஒற்றை தலைவலி வருவதற்கு காரணம் என்ன ? இன்னும் உங்களுக்கு தெரியாத இத்தனை அறிகுறிகள் இருக்கு ! | health | கிங் நியூஸ் 24x7

உடல் நலம்
ஒற்றைத் தலைவலி மிகவும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும். இது பொதுவானது தான் என்றாலும், தலைவலியைக் காட்டிலும், ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் வலி மிகவும் கடுமையானதாக இருக்கும். பொதுவாகவே 43 சதவீத பெண்களும், 18 சதவீத ஆண்களும் தங்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒருசமயத்தில் ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கின்றனர். ஒற்றைத் தலைவலியின் அசாதாரண அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களை முன்கூட்டியே எதிர்கொள்ள உதவும். தலைவலி அல்லாத ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன என பார்ப்போம்.
ஒற்றைத் தலைவலி பதற்றம் அல்லது கிளஸ்டர் தலைவலியிலிருந்து வேறுபட்ட நரம்பியல் பிரச்சனை ஆகும். ஒற்றைத் தலைவலி பல்வேறு அறிகுறிகளுடன் கூடிய ஒரு சிக்கலான நிலை ஆகும். ஒற்றைத் தலைவலியால் சிலருக்கு தலைவலி மட்டும் ஏற்படும். சிலருக்கு குமட்டல், பார்வை கோளாறு, கழுத்து வலி போன்ற அறிகுறிகள் கூட ஏற்படும்.
உலக மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் பேரை இந்த ஒற்றைத் தலைவலி பாதிக்கிறது. இதுதான் உலகளவில் மூன்றாவது பொதுவான நோய் ஆகும். ஆண்களைக் காட்டிலும், பெண்கள் தான் மூன்று மடங்கு அதிகமாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கடுமையான வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் ஒற்றைத் தலைவலி பல மணி நேரங்களில் இருந்து, சில நாட்கள் வரை இருக்கும்.
ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் நபருக்கு, நபர் வேறுபட்டு இருந்தாலும், சில பொதுவான அறிகுறிகளும் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்.
தலைவலி,
குமட்டல் அல்லது வாந்தி,
தலைச்சுற்றல்,
வெறுப்பு மனநிலை,
ஒளி, ஒலி அல்லது வாசனை உணர்திறன்,
மனச்சோர்வு அல்லது அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள்,
அதிக அளவு கொட்டாவி வருவது,
சோர்வு அல்லது தூங்குவதில் சிரமம்,
ஒற்றைத் தலைவலி பொதுவாக நான்கு நிலைகளாக பார்க்கப்படுகின்றன. 1. புரோட்ரோமல் நிலை, 2. ஆரா, 3. தலைவலி, 4. போஸ்ட்ட்ரோமல் நிலை
புரோட்ரோமல் நிலை : புரோட்ரோமல் நிலை ஒற்றைத் தலைவலி சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும். அதிகப்படியான கொட்டாவி, அதிக உணவு ஏக்கம், எரிச்சல், சோர்வு, மன நிலை பாதிப்பு, தலைசுற்றல் போன்ற அசாதாரண அறிகுறிகளை இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிப்பர். ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான அறிகுறிகள் ஏற்படும்.
உங்களுக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால், நீங்கள் தலைவலி துவங்குவதற்கு முன் எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், என்ன உணவை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கவனிக்கவும்.
இதன் மூலம் உங்களின் புரோட்ரோமல் மற்றும் ஆரா நிலை அறிகுறிகளைப் புரிந்து கொள்ள முடியும். இது நீங்கள் ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சையை முன்கூட்டியே பெற உதவி புரியும்.
ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் அழுத்தங்கள், செயல்களை தவிர்த்தல், மருந்தகங்களில் கிடைக்கும் வலி மருந்துகளை எடுத்துக் கொள்தல், போதுமான தூக்கத்தைப் பெறுதல் போன்றவற்றின் மூலம் ஒற்றைத் தலைவலியை தவிர்க்கவும், நிர்வகிக்கவும் முடியும்.
ஒற்றைத் தலைவலிக்குப் பிந்தைய போஸ்ட்டிரோமல் நிலையில், ஓய்வெடுப்பது, ஒற்றைத் தலைவலி தூண்டுதல்களைத் தவிர்ப்பதன் மூலம் அதில் இருந்து விரைவில் விடுபட முடியும்.
ஒற்றைத் தலைவலி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான தகுந்த காரணங்கள் ஏதும் இல்லை என்றாலும், ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் செயல்கள், அறிகுறிகளைத் தடுப்பதன் மூலம் அதன் வலியைக் குறைக்க முடியும். ஒற்றைத் தலைவலி ஏற்பட்ட ஆரம்பத்திலேயே, அதற்குரிய மருந்துகள், சிகிச்சையை எடுத்துக் கொள்வது அதனால் ஏற்படும் வலியைக் குறைக்கவும், தவிர்க்கவும் உதவும்.