பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது: ராகுல் காந்தி

பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது: ராகுல் காந்தி
X

rahulgandhi

பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், வாக்களிக்க தகுதி பெற்றவர்களை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி பிஹாரின் சாசராமில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார். இதன் இறுதி நிகழ்ச்சி தலைநகர் பாட்னாவில் (செப்.1) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "அரசியலமைப்பை பாஜக கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த யாத்திரைக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதிக எண்ணிக்கையில் மக்கள் இதில் பங்கேற்று வாக்கு திருட்டு குறித்து கோஷங்களை எழுப்பினர். பாஜகவினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அணுகுண்டைவிட பெரிய ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, நீங்கள் தயாராக இருங்கள். ஒரு ஹைட்ரஜன் குண்டு வர இருக்கிறது. விரைவில் வாக்குத் திருட்டின் உண்மையை மக்கள் கண்டுபிடிப்பார்கள். அப்போது, பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் தனது முகத்தை காட்ட முடியாது. இது உறுதி. வாக்கு திருட்டு என்றால் அது உரிமைகளின் திருட்டு, ஜனநாயகத்தின் திருட்டு, வேலைவாய்ப்பின் திருட்டு. எனவே, இவ்விஷயத்தில் பிஹார் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Next Story