நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்!!

election commission
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தசூழலில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்களது மாநிலங்களில் உள்ள மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது வாக்காளர்பட்டியல் திருத்தம் நடைபெற்றது ஆகிய தகவல்களை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைதேர்தல் ஆணையர் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். முன்னதாக பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காள பட்டியல் திருத்தப் பணியின்போது சுமார் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.