இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம்!!

Train
இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே கூறலாம். ரயில் முன்பதிவில் இருக்கைகளை உறுதி செய்வது என்பது பொதுமக்களுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது. அதிலும் தீபாவளி, பொங்கல், நவராத்திரி உள்ளிட்ட விஷேச நாட்களில் ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்து விடுவது வழக்கம்.முன்பதிவில் ஏஜெண்டுகளின் ராஜ்ஜியம் கொடுக்கட்டி பறந்து வருகிறது. ஏஜெண்டுகளிடம் சென்றால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற நிலை உருவானது. இதற்கு ரயில் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ரயில்வே அமைச்சகம் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்ற விதியை கொண்டு வந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட ஆதார் எண்ணில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது சாதாரண டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில் டிக்கெட்டுக்களை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், முக்கிய நாட்களுக்கான முன்பதிவை டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடனே முகவர்கள் முன்பதிவு செய்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது பொது டிக்கெட் முன்பதிவு செய்ய, டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் டிக்கெட் முன்பதிவு அதிகாலை 12.20 முதல் நள்ளிரவு 11.45 வரை நடைபெறும். இந்த அறிவிப்பின்படி அதிகாலை 12.35 வரை ரயில்வே கணக்கில் ஆதார் அப்டேட் செய்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஆதார் அப்டேட் செய்யாதவர்கள் அதிகாலை 12.35க்கு மேல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது பொது டிக்கெட் முன்பதிவுக்கும் இந்த விதிமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.