228 மார்க் எடுத்துவிட்டு 456 ஆக மாற்றிய குடும்பம்! மேலும் ஒரு நீட் தேர்வு மோசடி!!

நீட் தேர்வு
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதர் (55). திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி (47). மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி (19). பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் காருண்யா ஸ்ரீவர்ஷினி 228 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால், பெற்றோர் மற்றும் நீட் முறைகேடு கும்பலுடன் இணைந்து 456 மதிப்பெண் பெற்றதாக நீட் போலி மதிப்பெண் சான்றிதழ், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கான போலியான சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்துள்ளார். அங்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அட்மிசன் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீவர்ஷினி, நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி பொறுப்பு முதல்வர் வீரமணி கொடுத்த புகார்படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், விசாரணை நடத்தி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 7ஆம் தேதி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, காருண்யா ஸ்ரீவர்ஷினி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சித்து இருப்பதும், அங்கு போலியான நீட் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் போலியான இட ஒதுக்கீடு சான்றிதழ் கொடுத்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்ததை அறிந்து அருகில் உள்ள ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் விசாரணை செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது காருண்ய ஸ்ரீவர்ஷினி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு சான்றிதழ்களை வைத்து சேர்ந்து கைதானது தெரியவந்துள்ளது. மேலும், மாணவி காருண்யா ஸ்ரீ வர்ஷினிக்கு உதவிய நீட் முறைகேடு கும்பல் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
