சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - கிங் நியூஸ் 24x7 |

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - கிங் நியூஸ் 24x7 |
X

சுனிதா வில்லியம்ஸ்



அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.


விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத்திற்கு மேலாக விண்வெளி நடை புரிந்து அவர் முறியடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இந்த விண்வெளி நடையின்போது, அவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வன்பொருட்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அவர் அகற்றினார்.மேலும், சுனிதா வில்லியம்ஸ் டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் என்ற பகுதிகளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் நுண்ணுயிரிகள் ஏதேனும் இருக்கின்றனவா, வேறு என்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்யப்படும்.


இவை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 72வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த பயணம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.தற்போது சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டிருப்பது அமெரிக்காவின் 92வது விண்வெளி நடை. அவர் அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு (EST) இந்த விண்வெளி நடையை தொடங்கினார்.சுனிதா வில்லியம்ஸ் சிவப்புக் கோடுகள் கொண்ட விண்வெளி வீரருக்கான உடையை அணிந்திருந்தார். அவருடன் விண்வெளிக்குப் பயணித்த மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் இதில் பங்கேற்றார்.


அவர்கள் முதலில் எட்டு நாட்கள் மட்டுமே தங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில கசிவுகள் காரணமாக அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதப்பட்டது.

எனவே அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story