379 ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருதுகள்

379 ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருதுகள் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவா் ச.உமா தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாடாளுமன்ற உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் எம்.எல்.ஏ பெ.ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில், விவேகானந்தா கல்வி நிறுவன தலைவா் முனைவா் மு.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு 379 ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கி பேசியதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள். அதற்கு பாராட்டுக்கள். ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. படி, படி என்ற ஆசிரியர்களையும், அடி, அடி என்று சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும் நாங்கள் மறக்கமாட்டோம். நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ள புத்திசாலி குழந்தையை வளர்த்து சமுதாயத்தில் பெரிய ஆளாக மாற்றுவதில் ஆசிரியர்களுக்கு அளப்பறிய பங்கு உண்டு. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரைம் இண்ஸ்ட்டியுசன் எனப்படும் பள்ளியில் பயின்ற நமது அரசுப்பள்ளி மாணவர்கள் 274 மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.டி, ஐ.ஐ.டி, தேசிய சட்ட கல்லூரி உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். பெண் ஆசிரியர்கள் உடை உடுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை வரப்பெற்றது. அது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு ஏதுவான உடையினை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அணிந்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வட்டூர் ஜி.தங்கவேல், கே.செல்வராசு. பி.பி.தனராசு, என்.நாச்சிமுத்து, ஆர்.செல்வம், ஆ.இளங்கோவன், பேரூர் கழக செயலாளர்கள் மு.திருமலை, எஸ்.பி.கார்த்திக் ராஜ், பள்ளிபாளையம் நகரமன்ற தலைவா் மோ.செல்வராஜ், திமுக மாவட்ட துணை செயலாளர் கே.மயில்சாமி, திருச்செங்கோடு ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜவேல் (எ) ராஜபாண்டி மற்றும் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story