நூலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளதா என கேட்டறிந்தார்
பெரம்பலூர் நகராட்சி பகுதியிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (05.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்கும் பகுதி, குடிமைப்பணி மற்றும் போட்டித் தேர்வு நூல்கள் பகுதி, நாளிதழ்கள் மற்றும் பொது இதழ்கள் உள்ள பகுதிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு நடைபெறும் பகுதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நூலகத்தில் போட்டித்தேர்வு மற்றும் UPSC தேர்வு தொடர்பான எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்ட மாவட்ட ஆட்சியர் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நூலக அலுவலருக்கு அறிவுறுத்தினார். பின்னர் போட்டித் தேர்விற்கு படிக்கும் மாணவரிடம் நூலகத்தின் வசதிகள் குறித்து கலந்துரையாடி நூலகத்திலுள்ள போட்டித்தேர்வு புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து தேர்வில் வெற்றிபெற வேண்டும் எனவும், இதேபோன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தினையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது மாவட்ட நூலக அலுவலர் முத்துக்குமரன், இரண்டாம் நிலை நூலகர் செல்வி சரஸ்வதி பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story