இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாத அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

உடலை வாங்கி தரக்கோரி காவல் ஆய்வாளர் காலில் விழுந்து உறவினர் கதறல்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பச்சாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் தனது மனைவி விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் பல்லடம் மங்கலம் சாலை, அரசங்காடு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆகியும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என்றும் மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக மருத்துவர்கள் கூறியதாலும் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்துக்கிடக்கும் சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த போராட்டத்தின் போது இறந்த நபரின் உறவினர் உடலை உடனடியாக பெற்றுத் தரக்கோரி காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்தார். போலீசார் உடனடியாக உடலை பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறிய உறுதியளித்த பின்னர் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அவரது உறவினர்கள் செய்தியாளர்களிடம் பல்லடம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் அவசர சிகிச்சை வரும் நோயாளிகள் மற்றும் விபத்து, மர்மமான முறையில் உயிரிழக்கும் நபர்களின் உடலை பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர் இனிமேல் இதுபோல் நடந்தால் பல்லடம் அரசு மருத்துவமனையை இழுத்து மூடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
Next Story