உத்திரமேரூர் பகுதியில் தலைவர் சிலை வைக்க அரசு காலம் தாழ்த்துகிறது

உத்திரமேரூர் பகுதியில் தலைவர் சிலை வைக்க அரசு காலம் தாழ்த்துகிறது
X

உத்திரமேரூர் பகுதியில் தலைவர் சிலை வைக்க அரசு காலம் தாழ்த்துகிறது

உத்திரமேரூர் அருகே ஶ்ரீ டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் திருவுருவ சிலையை பள்ளி வளாகத்தில் வைக்க அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வரும் அரசு





வரும் 12ம் தேதி சுந்தரவடிவேலு அவர்களின் பிறந்த நாளில் பள்ளி வளாகத்தில் சிலையை வைத்து முதல்வர் திறந்து வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 12.10.1912ம் தேதி துரைசாமி - சாரதாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் பத்ம ஸ்ரீ . டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு.

இவர், தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆட்சி காலங்களில் தமிழக கல்வித்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி குறிப்பாக மதிய உணவு திட்டம்,பள்ளி மாணவர்களுக்கு சீருடை திட்டம், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அப்போது செயல் படுத்தினார்.

மேலும், தமிழக அரசின் பொது கல்வி இயக்குனராக 11 ஆண்டுகளும், உயர்கல்வி இயக்குனராக ஒரு ஆண்டும், மத்திய அரசின் தலைமை கல்வி ஆலோசகராக இரண்டு ஆண்டும், தமிழக அரசின் முதன்மை கல்வி ஆலோசகராக இரண்டு ஆண்டும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக ஆறு ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார்.

இவரது பணியை பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருது 1961 ல் வழங்கப்பட்டுள்ளது. இவர், காந்தம்மா என்னும் பெண்ணை தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருவள்ளுவன் என்ற மகன் பிறந்து அவனும் சிறு வயதிலேயே இயற்கை எய்தினார். சுந்தரவடிவேலு மனைவி காந்தமாலும் 1981 இல் இயற்கை எய்தினார். பின்னர், சுந்தரவடிவேலு அவருடைய தம்பி சிவானந்த மகன் லெனின் வீட்டில் வசித்து வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக 12.04.1993ல் இயற்கை எய்தினார்.

இவரது சொந்த ஊரான நெய்யாடுபாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பல லட்சம் ரூபாய் செலவில் அப்போதே சுந்தரவடிவேலு பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டி கொடுத்து உதவி உள்ளார்.

அந்த பள்ளி சுந்தரவடிவேலு அவர்களுடைய தந்தை பெயரில் நெ.ச.துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இத்தகைய கல்வி துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த சுந்தரவடிவேலு அவர்களின் திருவுருவ சிலை நெ.ச.துரைசாமி பள்ளி வளாகத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வைப்பதற்காக சுந்தரவடிவேலனார் சமத்துவ சமுதாய அறக்கட்டளை சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, பள்ளியில் மணிமண்டபம் கட்ட அனுமதித்த அரசு அதிகாரிகள் சிலை வைக்க கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி தராமல் இழுத்து அடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வரும் 12 ம் தேதி சுந்தரவடிவேலு அவர்கள் பிறந்த நாளன்று அவருடைய சிலையை அந்த பள்ளி வளாகத்தில் வைத்து முதல்வர் திறந்து வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story