உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மோகனூர் வட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மோகனூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசின் சேவைகள், நலத்திட்டங்கள், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் இன்று காலை 9.00 மணி முதல் மோகனூர் வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, இந்த கள ஆய்வின் மூலம் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் குறித்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, 2 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.00 இலட்சம் உதவித்தொகை மற்றும் 6 பயனாளிகளுக்கு தோராய பட்டாக்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக, மோகனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம், மோகனூர் பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரவுண்டானா அமைக்கும் பணி மற்றும் பலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், ஒருவந்தூர் ஊராட்சி, முதலியார் தெரு பகுதி மற்றும் சுப்பரமணியம்புரம் ஆகிய பகுதிகளில் ஊட்டச்சத்து பெட்டகம் பெற்ற பயனாளிகளுடன் மாவட்ட கலந்துரையாடினார். முதலியார் தெரு, காவிரி கரையோர பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் பேரூராட்சி வார சந்தை மற்றும் பொது சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமாக பராமரிக்குமாறு பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மோகனூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகள் விபரம், குடியிருப்பில் அடிப்படை வசதிகள் குறித்தும், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம், துணி பை மற்றும் மஞ்ச பைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் பேரூராட்சி கிளை நூலகத்தில் தினசரி வருகை தரும் வாசகர்களின் விபரம், நூலகத்தில் உள்ள மொத்த புத்தகங்களின் விபரம், வாசகர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து நூலகரிடம் கேட்டறிந்தார். மேலும், மோகனூர் பேரூராட்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பயன்பெறும் அரசு போட்டித்தேர்வர்களின் விபரம், போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள், அறிவுசார் மையத்திற்கு வருகை தருபவர்களின் விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கலைராணி, மோகனூர் வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story