போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த கவுன்சிலர் தகுதி இழப்பு: கமிஷனர்
X
Kanchipuram King 24x7 |13 Jan 2025 6:26 PM IST
காஞ்சிபுரத்தில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர் தகுதி இழப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான கவுன்சிலர் தேர்தலில் 27வது வார்டில், சுயேச்சையாக போட்டியிட்டு ஷாலினி என்பவர் வெற்றி பெற்றார். இவருக்கு போட்டியாக, அதே வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட விஜயகுமாரி என்பவர் ஷாலினியிடம் தோற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27வது வார்டு பெண்களுக்கான பட்டியலின வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிந்த பின், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற விஜயகுமாரி, காஞ்சிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், 'கடந்த 2022ல், 27வது வார்டில் வெற்றி பெற்ற ஷாலினி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என, போலியான சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்' என, வழக்கு தொடர்ந்தார். வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறியும், கவுன்சிலராக தொடர ஷாலினிக்கு தற்காலிகமாக தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷாலினி வழக்கு தொடர்ந்தார். காஞ்சிபுரம் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவு பெற்றார். அதை தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில், ஷாலினி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், போலியாக ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவை மேற்கோள்காட்டி, ஷாலினி கவுன்சிலர் பதவி இழந்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், தன் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளார்.
Next Story