மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகள் பட்ஜெட்டில் முற்றிலுமாக புறக்கணிப்பு: பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனம் கருத்து
X
Chennai King 24x7 |4 Feb 2025 10:19 PM IST
பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை அகவிலைப்படி வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதேபோல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 13 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஓய்வூதியதாரர்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார நல்வாழ்வு மையங்களை ஏற்படுத்துவது, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவன அறிவிப்பை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறவில்லை. மேலும், காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது. ரயிலில் பயணம் செய்யும் மூத்தக் குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்துவது, பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக அதிகரித்து வழங்குதல், உயிரிழக்கும் மத்திய அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு 100 சதவீதம் கருணை அடிப்படையில் பணி வழங்குதல் போன்ற எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மொத்தத்தில், இந்த பட்ஜெட் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைள் புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story