நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

X

மைக்கேல் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மைக்கேல் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு அந்தப்பணிகளை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஒரே இடத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலும் பசுமை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் திண்டுக்கல், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி, நத்தம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, கொடைக்கானல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 305 ஊராட்சிகளில் 7,187 இடங்களில் சுமார் 5,95,437 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் சார்பில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், அழகர் கோவில், நத்தம், சிறுமலை, அய்யலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-2026ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 57,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சவர்ணம், பத்மாவதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story