திருமண மண்டபம் கட்டும் பணியை நிறுத்த உத்தரவு

X

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் திருமண மண்டபம் கட்டும் பணியை தற்போது நிலையில் நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல் மாநகரத்தில் அபிராமி அம்மன் கோவில் புகழ்பெற்றதாகும், திருக்கோவில் காலகத்தீஸ்வரர் திருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள மூலதன பணத்தை எடுத்து ஆங்காங்கே கல்யாண மண்டபங்கள், பயணியர் விடுதி, உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தார், அந்த அரசாணையின்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலை துறை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் திருமண மண்டபங்கள் கட்ட மற்றொரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நிரந்தர வைப்பு நிதியிலிருந்து ரூபாய் இரண்டு கோடியையும், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் நிதியில் கடனாக ரூபாய் 1.5 கோடியையும் எடுத்து திண்டுக்கல் நகரில் ஒரு திருமண மண்டபம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசானையின்படி உள்ளாட்சித் துறையிலிருந்து திருமண மண்டபம் கட்டுவதற்கு கட்டிட அனுமதி உள்ளிட்ட எந்த அடிப்படை அனுமதியும் வாங்காமல் 6% பணியை முடித்து விட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தெரிய வந்தது. இதனை அடுத்து மதுரை எழுமலையை சேர்ந்த இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்து சமய அறநிலையத்துறை சட்ட பிரிவு 66இல் எந்தெந்த பணிக்கு எல்லாம் கோவிலின் நிதியில் இருந்து எடுக்க முடியும் என தெளிவாக குறிப்பிட்டிருந்த போதும் சட்டத்திற்கு புறம்பாக திருமணம் மண்டபம் கட்டுவதற்கு கோவிலின் மூலதனத்தை கரைக்க இந்து சமய அறநிலையத்துறைகோ அல்லது கோவில் செயல் அலுவலருக்கு உரிமை இல்லை என வாதிடப்பட்டது. இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் லக்ஷ்மன், அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகினர். மேற்படி வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருமதி நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் செயல் அலுவலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு முறை உத்தரவிட்டிருந்தும், பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று மூன்றாவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் இதே போல மற்றொரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு அரசாணை ஒன்றை ரத்து செய்துள்ளது என்றும், அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் நிரந்தர வைப்பு நிதியை வைத்து ஊட்டியில் ஒரு தங்கும் விடுதி கட்ட வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு அரசு மேற்படி அரசாணையை வாபஸ் பெற்றுள்ளது என்பது குறித்த உத்தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. இருதரப்பையும் கேட்ட நீதிமன்றம் நீதிபதிகள் மேற்படி அபிராமி அம்மன் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் மூலதன வைப்பு நிதியிலிருந்து கட்டப்படவிருக்கும் கல்யாண மண்டபத்தை தற்போது நிலையில் நிறுத்துமாறும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கை வரும் 9ஆம் தேதிக்கு அன்று ஒத்திவைத்தார்கள்.
Next Story