பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறப்பு

X

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக குறைந்தது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடிகொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.47 அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 113 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 950 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், காலிங்கராயன் பாசனத்திற்கு 250 கன அடி நீரும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 3,600 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.76 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.44 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.65 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story