சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருவிழா
ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தேர்த்திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த மாதம் 22ம் தேதி இரவு மூன்று கோயில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினந்தோறும் பெண்கள் கம்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதில், நேற்று முன்தினம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை நடந்தது. இதில், பக்தர்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து, அதனை அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து, சின்ன மாரியம்மன் கோயிலில் நேற்று காலை 9.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோயிலுக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜை, திருஷ்டி பூஜை முடிந்த பின்பு, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரோட்டத்தின்போது இருபுறம் சுற்றி நின்றிருந்த பக்தர்கள் பரவச கோஷமிட்டு தேரில் வந்த அம்மனை வழிபட்டனர். தேரானது பெரியார் வீதி வழியாக சென்று அக்ரஹாரம் வீதி உட்பட பல்வேறு வீதிகளில் பக்தர்களின் வழிபாட்டிற்காக நிறுத்தப்படுகிறது. தொடா்ந்து, நாளை(4ம் தேதி) மாலை 4 மணிக்கு, தேரோட்டம் தொடங்கி சின்ன மாரியம்மன் கோயிலில் நிலை வந்தடைகிறது. அன்றைய தினம் இரவு சின்ன மாரியம்மனின் திருவீதி உலாவும், காரை வாய்க்கால் மாரியம்மனின் திருவீதி உலாவும் நடக்கிறது.
Next Story