உயர் நீதிமன்ற வளாகம், அண்ணா நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்

உயர் நீதிமன்ற வளாகம், அண்ணா நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்
X
சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றம், அண்ணா நகர், பெசன்ட்நகர் போன்ற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகர் பாண்டி பஜாரில் உள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தில் போதிய வசதிகள் இல்லை. முறையாக பராமரிக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், அங்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, பாண்டி பஜாரில் உள்ள நடைபாதை வணிக வளாகத்தை பார்வையிட்டு, அதை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடி, அறிவுரைகளை வழங்கினார். தணிகாசலம் சாலை: பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பாண்டிபஜார் தணிகாசலம் சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.40 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 512 இரு சக்கர வாகனங்கள், 213 கார்களை தானியங்கி முறையில் நிறுத்தும் வகையில் இந்த வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு: இந்த வாகன நிறுத்தத்தை பராமரிக்கும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு முடிவும் தருவாயில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இந்த வாகன நிறுத்தம் சிறப்பாக இயக்கப்படும். மேலும், வாகன நிறுத்த சேவைகளை மேம்படுத்த வட்டார அளவில் புதிய ஒப்பந்தங்களை போட இருக்கிறோம். பெசன்ட்நகர், அண்ணாநகர், உயர் நீதிமன்ற வளாகம் போன்ற பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டலக்குழு தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் (பூங்கா) டி.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story