நாமக்கல் சாய் தத்தா பிருந்தாவனத்தில் ராமநவமி சந்தனக்காப்பு உரூஸ் விழா!

X

நாமக்கல் ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் (ஏப்ரல் -6) ராமநவமியை முன்னிட்டு காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு காலை 7 மணியளவில் கொடியேற்றத்துடன் பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலீசா பாராயணம் நடைபெற்றது. பின்னர் நாமகிரிலட்சுமி இசைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. வண்ண வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வகையான வாசம் நிறைந்த பூக்களால் மலர் மாலைகள் சூட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.பின் பக்தர்கள் தங்களது வலது கையில் சந்தனத்தை பூசிக்கொண்டு சாய் பிராகாரத்தில் கையை பதித்து வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நாமக்கல் ஸ்ருதிலயா இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் சாய்பாபா பக்தி கீர்த்தனைகளை பாடி சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.முன்னதாக ராம நவமியை முன்னிட்டு நிர்த்திய நாட்டிய பள்ளி மாணவ மாணவிகளின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்த ராமநவமி சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story