கருப்பூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கருப்பூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
X
போலீசார் விசாரணை
சேலம் கருப்பூர் நாச்சியப்பன் தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அருண் (வயது 27), என்ஜினீயரிங் படித்து விட்டு பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 21-ந் தேதி விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மாலை கரும்பாலை பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றார். நண்பர்களுடன் அருண் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உயரமான இடத்தில் இருந்து அருண் கிணற்றுக்குள் குதித்ததாக தெரிகிறது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். அப்படி இருந்தும் அருண் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அருண் உடல் மீட்கப்பட்டது.அருண் உடலை கண்டு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. கிணற்றில் மூழ்கி ஐ.டி. நிறுவன ஊழியர் பலியானது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story