பட்டா மாறுதல் முகாம் ஆட்சியர் ஆய்வு

வெண்ணாம்பட்டி A.R.திருமண மண்டபத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் கலெக்டர் சதீஷ் ஆய்வு
தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம், வெண்ணாம்பட்டி A.R.திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான, நகர்புற வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இணைந்து நடத்தும் பட்டா மாறுதல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், பார்வையிட்டார்.தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம், விருப்பாட்சிபுரம் திட்ட பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரிலேயே இருந்து வந்ததால், வீட்டுமனைகளை கிரயம் பெற்றுள்ள உரிமைதாரர்கள் தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் இன்றைய தினம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கிரயம் பெற்றுள்ள உரிமைதாரர்கள் தங்களிடம் உள்ள கிரய பத்திரம், வில்லங்க சான்று மற்றும் உரிய ஆவணங்களுடன் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பட்டா மாற்றம் செய்திட மனுக்கள் பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமில் சுமார் 240-க்கும் மேற்பட்ட கிரயம் பெற்றுள்ள உரிமைதாரர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, பட்டா மாறுதல் பெற மனு அளித்துள்ளனர். இச்சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடு பணிகளையும், பயனாளிகளின் ஆவணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார். மேலும், இச்சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ளவர்களுக்கு ஆவணங்கள் சரியாக இருப்பின் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டா வழங்குவதற்கான உரிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். இதனைதொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் அடிப்படை வசதிகள், சிகிச்சைகள் குறித்தும், மருத்துவர்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஓசூர் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தகே.பாண்டியராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி உதவி பொறியாளர் ஜி.முகுந்தன், வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story