நாமக்கல் மாநகர பகுதியில் மாதந்திர மின் நிறுத்தம் அறிவிப்பில் குளறுபடி! சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

X

நாமக்கல்லில் மின் வாரியம் முறையற்ற அறிவிப்பால் பல கோடி இழப்பு என்று நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
நாமக்கல் பகுதியில் மாதாந்திர பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்யும்பொழுது தகுந்த ஆலோசனையோடு முறையாக செய்ய வேண்டும் என்று நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது..நாமக்கல் பகுதி லாரிகள் நிறைந்த பகுதியாகும் லாரி தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து பல்வேறு சிறு,குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் நாமக்கல் பகுதியின் முக்கிய வாழ்வாதாரங்களில் லாரி தொழில் குறிப்பிடத்தக்கதாகும்.இந்திய அளவில் நாமக்கல் பகுதி லாரி தொழிலில் முக்கிய அங்கம் வகிக்கிறது.பிற மாவட்டங்களை விட இங்கு டாரஸ்,எல்பிஜி ட்ரெய்லர் மற்றும் கனரக என அனைத்து லாரிகளும் நிறைந்த பகுதியாகும். லாரி உரிமையாளர்களுக்கு மாநில சம்மேளனம் முதல் தொழிலைச் சார்ந்த பல சங்கங்களுக்கு தலைமை இடமாக நாமக்கல் விளங்குகிறது.லாரி தொழிலின் முக்கிய அங்கமாக விளங்கும் டயர் ரீட்ரேடிங் தொழில் தமிழகத்திலேயே அதிக அளவில் உள்ளது நாமக்கல்லில் தான் லாரி உரிமையாளர்களுக்கு புதிய டயரில் ஆகும் செலவில் மூன்றில் ஒரு பகுதி செலவில் ரீட்ரேடிங் செய்து கொடுத்து லாரி உரிமையாளர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. பல்வேறு இடர்பாடுகளால் இந்த தொழில் நலிவடைந்து வரும் நிலையில் , நாமக்கல்லில் மின்வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் மாதாந்திர பராமரிப்புக்காக மின்சார நிறுத்தம் செய்யும் பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு பத்திரிகைகள் மூலம் அறிக்கை தருகிறார்கள்.அதற்குத் தகுந்தாற்போல் ரீட்ரேடிங் உரிமையாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சரி செய்யும் பொழுது திடீரென்று மின் நிறுத்தம் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது.இச்செயல் பலமுறை நடந்துள்ளது. இதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களையும் இழந்து பணிமனைகளுக்கு விடுமுறையும் அளித்து செய்த முன்னெச்சரிக்கைகள் வீணாகிறது இதனால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது. இப்படி பணிமனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களும் சிரமப்படுகின்றனர். இது ரீட்ரேடிங் தொழிலுக்கு மட்டுமின்றி லாரி பாடி பில்டிங்,லேத் மற்றும் பெயிண்டிங் உள்ளிட்ட இத்தொழிலை சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி கட்டுமானம், கோழி பண்ணை,விவசாயிகள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த மின்சார நிறுத்தத்தை முறையாக சரியான முறையில் திட்டமிட்டு அறிவிக்காமல் ஒவ்வொரு முறையும் முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதால் ஒவ்வொரு முறையும், நாமக்கல் பகுதிக்கு பல லட்சங்கள் பொருளாதார இழப்புகள் நடக்கிறது.இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் மின்சார வாரியத்திற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி மின் நிறுத்தம் அறிவிக்கும் பொழுது அது முறையாகவும் சரியாகவும் இருப்பதற்கு ஆவணம் செய்ய நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தை வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story