குழந்தைகளுக்கு சூடு வைத்த தாய் பரபரப்பு சம்பவம்

பொன்னேரி அருகே சொல் பேச்சு கேட்காத குழந்தைகளுக்கு சூடு வைத்த தாய். குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொதுமக்கள். தாய், தாயின் 2வது கணவரிடம் போலீஸ் விசாரணை.
திருவள்ளூர்: பொன்னேரி அருகே சொல் பேச்சு கேட்காத குழந்தைகளுக்கு சூடு வைத்த தாய். குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொதுமக்கள். தாய், தாயின் 2வது கணவரிடம் போலீஸ் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக பல்வேறு ஊர்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் குழந்தைகள் இருவரது கைகளில் காயம் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவரை பிரிந்த வேறு ஒருவருடன் இளம்பெண் வசித்து வருவதும் குழந்தைகளுக்கு தாயே சூடு வைத்ததும் தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18வயது இளம்பெண் சத்தியா என்பதும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிவா என்பவருடன் திருமணம் நடந்து 5வயதில் பெண் குழந்தையும், 3வயதில் ஆண் குழந்தையும் இருப்பது தெரிய வந்தது. மேலும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும், தம்முடைய சொல் பேச்சு கேட்காததால் குழந்தைகளுக்கு கை, கால்களில் சூடு வைத்ததாக போலீஸ் விசாரணையில் சத்தியா கூறியுள்ளார். இதனையடுத்து சத்தியா, அவரது 2வது கணவர் அன்பரசன் ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயே குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story