குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனித் திருவிழா தொடங்கியது!

X

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து அம்மனை வழிபட்டு செல்வர். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலையில் ேகாவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 2 மணி அளவில் முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பு கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. காலுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கால் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோவை வாழ் குரங்கணி நாடார்சங்கம், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கம், 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்திருவிழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கை, கால்கள் ஆகியவைகளை நேர்த்திக்கடனாக செலுத்துவர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Next Story