மின்மாற்றியில் பஸ் மோதி விபத்து

மின்மாற்றியில் பஸ் மோதி விபத்து
X
பொங்கலூர் அருகே மின்மாற்றியில் பஸ் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக 36 பயணிகள் உயிர் தப்பினர்
பொங்கலூரில் சாலை ஓரம் இருந்த மின் மாற்றியில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 36 பயணிகள் அதிர்ஷ்டவ சமாக உயிர்தப்பினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். பஸ்சை ராபர்ட் என்பவர் ஓட்டினார். இந்த பஸ் நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் துணை மின்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்மாற்றியில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தம் போட்டனர். அப்போது அதிர்ஷ்டவசமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக பஸ்சில் இருந்தவர்கள் அதன் பின்பகுதியில் இருந்த அவசர கால கதவை திறந்து ஒவ்வொருவராக அதிலிருந்து குதித்து தப்பினர். இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. ஆனாலும் பஸ்சில் பயணம் செய்த 36 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டிரைவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் பயணிகளை பத்திரமாக மீட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மின்சாரவாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு காலை 11 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பை கொடுத்தனர்.இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story