இணையதளம், இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே நத்தம் பட்டாவுக்கு விண்ணப்பிக்கலாம்

இணையதளம், இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே நத்தம் பட்டாவுக்கு விண்ணப்பிக்கலாம்
X
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ‘நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தை' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாக்களில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் அடிப்படையில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கப்படும். மேலும் கிராம பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலுகாக்களில் இ-சேவை மையம் மற்றும் இணையதளம் மூலம் பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே நத்தம் பட்டா மாறுதல் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுக்க காத்திருக்கும் நிலையை தவிர்த்து பொதுமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story