சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
X
வருகிற 7-ந் தேதி நடக்கிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இதுவரை பெரிய அளவிலான தேர் இல்லை. சிறிய சப்பரம் மூலம் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. கோட்டை மாரியம்மனுக்கு உபயதாரர் மற்றும் கோவில் நிதியுடன் மரத்தாலான புதிய தேர் வடிவமைக்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 40 அடி உயரம், 16 அடி அகலத்தில் தேர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. 15 அடி உயரத்துக்கு சிம்மாசனத்திலும், 25 அடி உயரத்துக்கு அலங்கார கொடுங்கை வேலைப்பாடுகளுடன், 100 டன் எடையில் தேர் அமைகிறது. 6 அடி சுற்றளவில் 4 இரும்பு சக்கரம், 5 அடியில் 2 இரும்பு உள் சக்கரம், 3 அச்சுக்கல் இரும்பு சக்கரம் ஆகியவை இடம் பெறுகிறது. சாமி சிலைகள் பூதப்பார், சிற்பபார், நடாசனம், தேவாசனம், சிம்மாசனம், ஆயக்கால், அலங்கார கொடுங்கைகள் வேலைப்பாடுகளுடன், கோணத்தேர் 8 பட்டை முகப்பு மற்றும் 4 குதிரை, ஒரு சாரதி மற்றும் வேங்கை, இலுப்பை, ஈட்டி, தேக்கு ஆகிய மரங்கள் மூலம் தேர் அமைக்கப்படுகிறது. விநாயகர், கோட்டை மாரியம்மன், விஷ்ணு, சிவன், முருகன் உள்பட 250 சாமி சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. தேர் ஐதீக முறைப்படியும், திருத்தேர் ரத சாஸ்திர படியும் உருவாகி உள்ளது. ரத சாஸ்திர முறைப்படி சிற்பங்களும், சிதம்பரம் நடராஜர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது போன்று தேர் வடிவமைக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக 15 அடி உயரத்திற்கு சிம்மாசனத்தில் தேர் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி 2 நாளில் முடிவடைந்து விடும். இதைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. தேர் வெள்ளோட்டம் கோவில் முன்பு தொடங்கி முதல் அக்ரஹாரம், தேர் வீதி, 2-ம் அக்ரஹாரம், பட்டை கோவில், சின்னகடை வீதி, பெரியகடைவீதி, பஜார் வீதி, கன்னிகாபரமேஸ்வரி கோவில் வழியாக தேர் மீண்டும் கோவிலை அடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
Next Story