கொல்லிமலையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

கொல்லிமலையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட துர்காமூர்த்தி, தலைமையில் கொல்லிமலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா 02.08.2025 மற்றும் 03.08.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆகிய விழாக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, தெரிவித்ததாவது: கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்திங்கள் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற ஆடித்திங்கள் 17 மற்றும் 18 (02.08.2025 சனிக்கிழமை மற்றும் 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழாவையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சித்த மருத்துவத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூகநலத் துறை, செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குழந்தை தொழிலாளர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு கொல்லிமலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி விழாவினை பசுமை திருவிழாவாக மிகச்சிறப்பாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு விழாவினை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.காவல் துறையினர் காரவள்ளியில் சோதனை சாவடிகள் அமைத்து கொல்லிமலை மலைப்பாதையில் லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்திடவும், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் வருபவர்களை அனுமதிக்க கூடாது. பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் சோதனை மேற்கொள்ள வேண்டும். மது அருந்தி வாகனங்கள் இயக்குவதை தடை செய்தல் மற்றும் பாதுகாப்பு ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.வனத்துறையினர் கொல்லிமலை மலைப்பாதையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள், கொல்லிமலை மலைப்பாதை மற்றும் பிற முக்கிய இடங்களில் மாபெரும் தூய்மைப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழா நடைபெறும் 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்திட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையினர் கொல்லிமலை பேருந்து நிலையம், அரப்பளீஸ்வரர் கோவில் ஆகிய முக்கிய பகுதிகளில் விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும். உணவுப்பாதுகாப்பு துறையினர் கொல்லிமலையில் உள்ள உணவகங்களில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட கலால் துறையினர் வல்வில் ஓரி அரங்கிற்கு வருகைதரும் பொதுமக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுகாதார துறையினர் காரவள்ளி, அரப்பளீஸ்வரர் கோவில், கொல்லிமலை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட வேண்டும். வல்வில் ஓரி விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் மு.அபராஜிதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திருமதி வ.சந்தியா, (பொது), இராமசந்திரன் (வேளாண்மை), மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ம.கிருஷ்ணவேணி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈ.எஸ்.முருகேசன் (நாமக்கல் (தெற்கு, வடக்கு (மு.கூ.பொ)), துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story