விவசாயத்தில் இயற்கை, உயிர் உரங்களை பயன்படுத்த தோட்டக்கலைத்துறை வேண்டுகோள்.

X

ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி உபயோகிப்பதை தவிர்த்து விவசாயத்தில் இயற்கை, உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வேண்டுகோள்.
பரமத்திவேலூர், செப்.9: நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரான காய்கறிகள்,பழங்கள்,பூக்கள், வாசனை மற்றும் நறுமண பயிர்கள். மலைத்தோட்டப்பயிர்கள உள்ளிட்ட பயிர்கள் 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பல்வேறு ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை பரிந்துரைக்கும் அளவினை விட அதிகமாக பயன்படுத்துவந்தால் மண் மற்றும் விவசாய பூமியானது மலடாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் விளை பொருட்களை வாங்கி உண்ணும் நுகர்வோருக்கும் உடல்நலத்தை பாதிக்ககூடிய தோல் நோய்கள்,புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. நோய் ஆகையால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற மற்றும் -உயிர் உரங்களும் டிரைகோ டெர்மா,சூடோமோனஸ், பேசிலோமைசிஸ், வேப்பம் புண்ணாக்கு,வேப்ப எண்ணை போன்ற உயிர் கட்டுப்பாட்டு காரணிகளையும் பயன்படுத்தி நிலையான வேளாண்மை வித்திட வேண்டும். பயிர் சுழற்சி,கலப்பின பயிர்கள், மண்புழு உரம்,பஞ்சகாவ்யா, தசகாவ்யா, மீன் கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தியும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கக்கூடிய மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறிகள் விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்துதல். கைகளால் பூச்சிக்களை அகற்றுதல்,பூச்சி எதிர்ப்பு பயிர்களை நடவுசெய்தல்,விதை நேர்த்தி செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை அளவினை கண்டறிய சிவப்பு முத்திரை மிகவும் நச்சு, மஞ்சள் முத்திரை அதிக நச்சு, நீல முத்திரை மிதமான நச்சு, பச்சை முத்திரை சற்று நச்சு என முத்திரைகள் ஒட்டப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை இனத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இயற்கை சார்ந்த இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மஞ்சள் ஒட்டும் பொறி, ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவசாயிகள் மேற்கூரிய அனைத்து ஒருங்கிணைந்த வழிமுறைகளையும் கடைபிடித்து தங்களுடைய மண் வளத்தை காத்து பொதுமக்கள் நலத்தினையும் காப்பாற்றிட உதவ வேண்டும் என்று இயக்குநர் புவனேஸ்வரி கேட்டுக்கொண்டர்.
Next Story