ராணிப்பேட்டையில் பெற்றோரை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

X

பெற்றோரை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதியரின் மூத்த மகன் முரளிதரன்(வயது 35). இளைய மகன் ஞானபிரகாசம். முரளிதரன் தனது தந்தையிடம் அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 10.3.2014 அன்று இரவு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு முரளிதரன் தனது தாய்-தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த முரளிதரன் வீட்டில் இருந்த கரும்பு வெட்டும் கத்தியை எடுத்து வந்து தாய்-தந்தையான மணி, வசந்தா ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த இரட்டை கொலை குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளிதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி பால கிருஷ்ணன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் தாய் - தந்தையை வெட்டி கொலை செய்த முரளிதரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அதைத்தொடர்ந்து, முரளிதரனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று வேலூர் சிறையில் அடைத்தனர்.
Next Story