சாலையின் நடுவே 'பார்க்கிங்' காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையின் நடுவே பார்க்கிங் காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டிகள் அவதி
X
சாலையின் நடுவே பார்க்கிங் செய்யப்படும் இதுபோன்ற கார்களை போலீசார் கண்டறிந்து அபராதம் விதிப்பதோடு, பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் நகரில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக, ஒராண்டிற்கு முன், போலீசார் போக்குவரத்து மாற்றங்கள் செய்தனர். காந்தி சாலை, பூக்கடைசத்திரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காந்தி சாலையில் இருபுறமும் கடைகளுக்கு செல்லும் வகையில் தனியாக இருவழிப் பாதையும், சாலையின் நடுவே செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தனி வழியும் அமைக்கப் பட்டது. ஏராளமான பட்டு சேலை கடைகள் இந்த சாலையில் இருப்பதால் வெளியூர்வாசிகள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். சமீப நாட்களாக காந்தி சாலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒரு வழிப் பாதையை சிலர் தவறாக பயன்படுத்தி, சாலையின் நடுவே கார்களை பார்க்கிங் செய்வது தொடர்கிறது. விசாலமான இந்த சாலையில், பட்டுச்சேலை வாங்க வரும் வெளியூர்வாசிகள், கார்களை நடுவே நிறுத்துகின்றனர். சாலையின் நடுவே நிறுத்தப்படும் இந்த கார்களால் விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சாலையின் நடுவே பார்க்கிங் செய்யப்படும் இதுபோன்ற கார்களை போலீசார் கண்டறிந்து அபராதம் விதிப்பதோடு, பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story