கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு.

கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில் வளாகத்தில் வரம் தரும் குழந்தை வடிவேலனின் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்திவேலூர், அக்.11: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வேலூர் வேல் வழிபாடு குழு நடத்திய முதலாம் ஆண்டு வரம் தரும் குழந்தை வடிவேலனின் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.35 மணிக்கு குழந்தை வடிவேலன் மற்றும் வேலுக்கு பால், தயிர், பன் னீர், இளநீர், சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை வடிவேலன் மற்றும் வேலுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மேல் மகாதீபாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் முருகப்பெருமானின் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மகிழ் குழுமங்களின் நிறுவனர் மகிழ்பிரபாகரன் ஏற்பாட்டில் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாலை 7 மணிக்கு மேல் கோவையைச் சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் விஜயகுமார் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு திமுக மாவட்ட கழக விளையாட்டு மேம்பாட்டு அணிதுணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்வில் கபிலர்மலை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர், கபிலர்மலை வட்டார அட்மா குழு தலைவர் கே. கே.சண்முகம்,கபிலர்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சாமிநாதன், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்து சிவ பக்தர்கள் அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எஸ் மூர்த்தி கலந்து கொண்டு குழந்தை வடிவேலனின் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள், திமுக பொறுப்பாளர்கள், பொதுமக்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்..
Next Story