தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Chennai King 24x7 |28 Oct 2025 11:01 PM ISTமழை, மெட்ரோ பணி மற்றும் சாலைப் பள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியது. பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் செல்ல முடியாமல் குறைந்த வேகத்தில் சென்றனர். எனவே பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மெட்ரோ மற்றும் மேம்பாலப் பணிகளால் சாலைகள் சுருங்கிவிட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. குறிப்பாக அண்ணா சாலையில் இரும்பு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி முதல் பூந்தமல்லி வரை சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்துகொண்டேஇருந்ததால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்: எம்.முத்துகணேஷ் | இதனால் இந்த பகுதிகளில் பொதுவாகவே வாகன நெரிசல் இருக்கும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக தேங்கிய நீரால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலை, திருவான்மியூர், அடையாறு, பட்டினப்பாக்கம் மற்றும் மெரினா வரை போக்குவரத்து நெரிசலை உணர முடிந்தது. இதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் வட சென்னையிலும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், மழை நின்றவுடன் சிறிது நேரத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
