பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி.

பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி. 14 பயணிகள் படுகாயம்.
பரமத்திவேலூர்,நவ.5: பெங்களூருவில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டு கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த ஆம்னி பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் சுந்தர் (47) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அடுத்த ராசாம்பாளையம் சுங்கசாவடியை கடந்து சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. தற்போது கீரம்பூர் பகுதியில் - மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்துக்காக சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த நிலையில் ஆம்னி பஸ் டிரைவர் இதை கவனிக்காமல் வேகமாக நேராக சென்றார். அப்போது திடீரென ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தானது. இரவு நேரம்  என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது ஆம்னி பஸ் திடீரென கவிழ்ந்து விபத்தானதும் அவர்கள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் தூங்கி கொண்டு இருந்த திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி அடுத்த வக்கம்பட்டி பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் (38) என்பவர் பஸ் கவிழ்ந்த போது பஸ்சில் இருந்து வெளியே விழுந்து பஸ்சின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த காவியா (27), மனோஜ் (29), திவாகர் (53), சிக்கந்தர் (48), ரூபனா (25) ஆகிய 5 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உமாசங்கர் (48) என்பவர் படுகாயத்துடன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி, ஆம்னி பஸ் டிரைவர் ஜோசப் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story