பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்குப்பதிவு.

பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்குப்பதிவு.
X
பரமத்தி வேலூர் பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்குப்பதிவு நடைபெற்றது.
பரமத்திவேலூர், நவ.16: வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 14 தி.மு.க உறுப்பினர்களும், 2 அ.தி.மு.க உறுப்பினர்களும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை என தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். இதில் வேலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.கவைச் சேர்ந்த லட்சுமி முரளியும், துணைத்தலைவராக தி.மு.கவைச் சேர்ந்த ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பேரூராட்சித் தலைவருக்கும் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் பேரூராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி மன்ற கூட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தீர்மானங்கள் நிறை வேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. இதனால் பேரூராட்சிக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் பேரூராட்சித் தலைவர் லட்சுமி முரளி மீது தி.மு.க உறுப்பினர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்தனர். இதனை எதிர்த்து பேரூராட்சி தலைவர் சார்பில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று வேலூர் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் செயல் அலுவலர் சண்முகம் தலைமையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஒட்டுப் பெட்டி வைத்து மறைமுக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் அ.தி.மு.கவைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. தி.மு.கவைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், ஒரு பா.ம.க உறுப்பினரும், ஒரு சுயேச்சை உறுப்பினர் உட்பட 16 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப்பதிவு சீட்டுகளையும், வாக்குப்பதிவு குறித்த வீடியோ ஆவணம் உள்ளிட்ட அனைத்தும் சீலிடப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறிவிப்பார்கள் எனவும் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் தெரிவித்தார்.
Next Story