கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணி: மார்ச் 1 முதல் குப்பையை கையாள நடவடிக்கை
X
Chennai King 24x7 |4 Feb 2025 10:09 PM IST
கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மார்ச் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பை கழிவுகளை கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. எந்த விதி, அறிவியல் முறையையும் பின்பற்றாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வந்ததால், குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. இனிவரும் காலங்களில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி காற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபடுதல் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு, ரூ.648 செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிர்வாக அனுமதியும் பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. சில ஆரம்பகால நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவை இம்மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் மார்ச் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பைகளை கையாளும் திறனுடன் பணிகள் வேகமெடுக்கும் என அவர் கூறினார்.
Next Story