சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் விதிகளை மீறி செயல்பட்ட 17 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் விதிகளை மீறி செயல்பட்ட 17 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து
X
அதிகாரிகள் தகவல்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகள் என 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில மருந்து கடைகளில் தூக்கம், வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. அதன்பேரில் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தரமற்ற மருந்துகள் தயாரிக்கப்படுகிறதா? எனவும், மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரையின் பேரில் மருந்துகள் மற்றும் வலி நிவாரண மருந்து விற்கப்படுகிறதா? எனவும் சோதனை நடத்தப்படுகிறது. இதில் விதிகளை மீறி செயல்படும் மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருந்து கட்டுப்பாடு துறை அதிகாரிகள் கூறியதாவது:- சேலம், நாமக்கல் மாவட்டங்களை பொறுத்தவரை சூரமங்கலம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, சேலம், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு என 8 சரகமாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சரகத்திலும் உள்ள மருந்து ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் மருந்து கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தாண்டில் இதுவரை விதிகளை மீறி செயல்பட்டதாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 17 மருந்து கடைகளுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 மருந்து கடைகளுக்கு நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் போது மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. இதில் ஒரு மருந்து கடையில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்டால் கோர்ட்டு மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story