நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நாமக்கல் லாரி ஓட்டுநர் சின்னண்ணன் குடும்பத்திற்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்!

நாமக்கல் மாவட்டம் தாத்தையங்கார்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று ஓட்டுநர் சின்னண்ணன் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் சிரூர் அருகே கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி,டேங்கர் லாரிகள் மற்றும் அதன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார் பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னு என்கிற சின்னண்ணன்(56), கரையான்புதூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன்(39), கிருஷ்ணகிரி முருகன் ஆகியோர் காணாமல் போனார்கள். இந்த சம்பவத்தில் நாமக்கல் அடுத்த தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னு என்கிற சின்னண்ணன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓட்டுநர் சின்னண்ணன் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி அறிவித்தது. இந்த நிதியை மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ச. உமா, உள்ளிட்டோர், நாமக்கல் மாவட்டம் தாத்தையங்கார்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று ஓட்டுநர் சின்னண்ணன் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதேபோல, இந்த இயற்கை இடர்பாடு விபத்தில் சிக்கி உயிரிழந்த நாமக்கல் கரையான்புதூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன் உடல் பாகம் இன்று நண்பகல் நாமக்கல் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story