ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்க கோரி மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக பட்டணம் சாலை, பெரிய கடை வீதி சின்ன கடை வீதி வழியாக வந்து ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ராசிபுரத்தில் தற்போது இயங்கி வரும் புதிய பேருந்து நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகன அதிகரிப்பால் ராசிபுரம் நகரம் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த நகராட்சி கூட்டத்தில் நகர எல்லையை விரிவுபடுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு வரவேற்கிறது. அவ்வாறு அமையும் புதிய பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு அமைந்தால் நகருக்கு வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வருவதோடு, நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் வியாபாரத் தேவையும், வெளியூர்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். மேலும், ராசிபுரம் நகர வளர்ச்சிக்கு புதிய பேருந்து நிலையம் உறுதுணையாக இருக்கும். ஆகையால் மக்கள் நலன் கருத்தி ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலை அருகில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
ராசிபுரம் நகர வளர்ச்சி குழுவினர் கூறும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் மாவட்டம் சேலம், அந்த மாவட்டத்தில் முதன்மை நகராட்சி இராசிபுரம் நகராட்சி. இந்த நகராட்சி அன்றைய காலத்திலிருந்து இன்று வரை வளர்ச்சி பெறாமல் உள்ளது. அதற்கு காரணம் இராசிபுரம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களால் சூழப்பட்டுள்ளது. எனவே அது ஓர் தீவு போல் உள்ளது. அதனால் நகரம் வளர்ச்சி அடையாமல் உள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதிக்கு புதிய பஸ் நிலையம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.