தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 385 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

X

கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ்களை அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம், ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஊராட்சி வளர்ச்சி குறியீடு மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story