ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏரிகளில் கழிவுநீர்: தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏரிகளில் கழிவுநீர்: தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்
X

ஏரிகளில் கலக்கும் கழிவுநீர்

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏரிகளில் கழிவுநீரை விடும் 15 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், ஏரி மற்றும் நீர் நிலைகள் மாசடைந்து வருகின்றன. ஐந்து மாதங்களில் 15 தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நெமிலியில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு 'சீல்' வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுக்காவில், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன.

இங்கு மோட்டார் வாகனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், டயர், கண்ணாடி, ரசாயணம், மருத்துவ சாதனங்கள் போன்றவை தயாரிக்கும் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

70,000 கோடி ரூபாய் இதில், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 70,000 கோடி ரூபாய் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் ரசாயண கழிவுகள் ஏரி மற்றும் நீர்நிலைகளில் கலந்து மாசடைந்து வருகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, அந்தந்த தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லது பிற தேவைகளுக்காக உபயோகிக்க வேண்டும். எனினும், பல தொழிற்சாலைகள் இதை பின்பற்றுவதில்லை, கழிவுநீர் நேரடியாக அருகில் உள்ள ஏரியில் கலக்க விடுகின்றனர்.

இதனால், ஏரிநீர் மாசடைவதுடன், அப்பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கின்றன. மாத்துார், வெங்காடு, ஸ்ரீபெரும்புதுார், போந்துார், மாம்பாக்கம், வைப்பூர், பிள்ளைப்பாக்கம், வடக்குப்பட்டு உள்ளிட்ட ஏரிகள், தொழிற்சாலை கழிவுநீரால் அதிகபடியாக மாசடைந்து வருகிறது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரிகளில் கலப்பதால், நிலத்தடி நீர் பாதிப்படைவதோடு, விவசாயிகளும் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். கழிவுநீர் கலந்த நீரில் விவசாயம் செய்யும் போது, உடல் அரிப்பு, தோல் நோய்களால் விவசாயிகள் பாதிக்கின்றனர். கால்நடைகள் பாதிப்பு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க, ஏரிநீரை குடித்து வருகின்றன.

இந்த நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரிகளில் கலந்து மாசடைவதால், நீரை அருந்தும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு வருகின்றன. அதே போல, இந்த தொழிற்சாலைகள், குப்பையை முறையாக அகற்றுவதாக வெளிக்காட்டினாலும், முறைகேடாக கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் எடுப்பவர்கள், கழிவுகளை ஏரி பகுதிகள், சாலையோரங்களிலும், குடியிருப்புகள் இல்லாத காலி இடங்களிலும், கொட்டி, தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையினால், நுரையீரல் பிரச்னை, சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளில் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.

எனவே, ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story