கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் காவல்துறையுமே பொறுப்பு!

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் காவல்துறையுமே பொறுப்பு!
X

குடந்தை அரசன்

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் காவல்துறையுமே பொறுப்பு என விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தெரிவித்துள்ளார்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஐ எட்டி உள்ளது.97 க்கு மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மருத்துவமனை, சேலம் மருத்துவமனை, விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்கிற பெருந்துயர செய்தியை அறிந்ததிலிருந்து மனவேதனையாக உள்ளது.

ஆற்ற முடியாத பெரும் துயரத்துடன் இந்த அறிக்கையை பதிவு செய்கிறேன். கள்ளச்சாராயத்தால் 36 பேர் உயிரிழந்ததற்கு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கும் தமிழக அரசு மற்றும் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும். தந்தையை இழந்து தாயை இழந்து உறவுகளை இழந்து இறந்த உடலை வீட்டிற்குள் வைத்து அழுவதற்கு கூட இடமில்லாமல் வீதியில் வைத்து ஒப்பாரி ஓலத்தோடு கதறி அழும் காட்சிகளை பார்க்கும் பொழுது ஈடுச் செய்ய முடியாத பேரிழப்போடு பரிதவித்து வருகிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். விலைமதிப்பில்லாத உயிர் போயிருக்கிற குடும்பத்தாருக்கு குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாயும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும்.

இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பவர்கள் மீது உரிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றிற்கு காரணம் விற்பவர்கள் மட்டும் என்று சுட்டிக்காட்டி தப்பிப்பது மற்றும் திசை திருப்புவதை ஏற்க முடியாது. காவல்துறையின் அனைத்து மட்டத்திலான அதிகாரிகளின் துணை இல்லாமல் இதுபோன்று கள்ளச்சாராயம் உட்பட கஞ்சா பொருட்களை விற்க முடியாது.அதற்கு ஆளுங்கட்சியின் தரப்பில் இருந்து துணை போனவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். இனி யாரும் துணை போகாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் அவர்கள் கையில் வைத்திருக்கக்கூடிய காவல் துறையில் இப்படிப்பட்ட ஒழுங்கினங்கள் தொடர்வது வேதனைக்குரியது. வெட்கக்கேடானது.

முதல்வரின் கையில் இருக்கும் துறையிலேயே அதிகாரம் செலுத்துகிறவர்கள் யார் யார்?கோளோச்சுபவர்கள் யார் யார்? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறைகளையும் சமமாக பார்க்கின்ற பார்வை ஆட்சியாளர் இடத்திலேயே இல்லை, காவல்துறையை செல்ல துறையாக பாவிப்பது இது போன்ற பெரும் துயரத்திற்கு அல்லது அரசின் அவப்பெயருக்கு ஆளாவதற்கு காரணமாக அமைகிறது. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு என்கவுண்டர் என்கிற பெயரில் பல கொலை செய்த ஏ.டி.எஸ்பி வெள்ளத்துரையை மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறையின் அத்துமீர்களை தடுக்க வேண்டி பரிந்துரைத்ததை ஏற்று உள்துறை செயலாளர் ஓய்வு நாளுக்கு முதல் நாளில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்ததை உள்துறை செயலாளர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துவிட்டார் என்று காவல் துறையை பகைத்துக் கொள்ள விரும்பாத முதலமைச்சர் தானாக முன்வந்து நடவடிக்கையை ரத்து செய்ததுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஏடி.எஸ்பி வெள்ளத்துரை முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார் என்றால் இது ஒரு "போலீஸ் ஸ்டேட்" என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது போன்ற செயல்களே காரணமாக அமைகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர் மற்ற ஏனைய துறையை சேர்ந்த அதிகாரிகளை விட காவல்துறையினருக்கு கூடுதலாக சலுகைகள் வழங்குகிற போக்கே இதுபோன்ற கடும் குற்றங்கள் காவல்துறையின் துணையோடு சுதந்திரமாக நடைபெறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு கட்டுப்பட்டு பணியாற்றுவதில்லை, காவல்துணை கண்காணிப்பாளர் கோட்டாட்சியருக்கு கட்டுப்பட்டு பணியாற்றுவதில்லை, ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்கள், வட்டாட்சியருக்கு கட்டுப்பட்டு சட்ட ஒழுங்கை பராமரிப்பதில்லை.மொத்த அதிகாரமும் காவல்துறையிடத்திலே இருப்பதைப் போன்ற மாயையை தொடர்ந்து உருவாக்கி வருவது அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமைகிறதா? கள்ளச்சாரத்தை பருகி இறந்த பெரும்பான்மையானோர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதை விற்றவர்கள் கூட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், கள்ளச்சாராயம் விற்க தூண்டியதோடு லாபம் பார்த்தவர்கள் மட்டும் பட்டியல் சமூகத்தை சாராத சமூகத்தைச் சேர்ந்தவர்கலாகவும், அரசியல்வாதிகளாகவும், காவல்துறையில் உள்ள அதிகாரிகளாகவும் இருக்கிறவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் எல்லாம் அந்த இடத்திலிருந்து மாற்றுவதற்கு துணை போன அரசு உயர் அதிகாரிகள் யார் யார்? அது போன்ற அதிகாரிகளை அரவணைத்த அரசியல்வாதிகள் யார் யார்? என்பதை விசாரணை செய்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும்.என விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களுகளின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.இனி மரக்காணம் கள்ளக்குறிச்சி போன்ற ஒரு சம்பவத்தை தமிழகம் சந்திக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story