தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது: திருமாவளவன்

Thiruma
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சமக்ர சிஷ்யா அபியான் திட்டத்தின்படி ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் நாங்கள் இந்த நிதி தர மாட்டோம் என நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இதனால் தமிழக கல்வித்துறைக்கு ஆயிரக்கணக்கான கோடி வந்து சேரவில்லை. அது தொடர்பாக எந்த நீதிபதியும் கருத்து சொல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். இந்த அடிப்படையில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற தி.மு.க. தலைவர் எங்களோடு உரையாடும்போது சூழலை கருத்தில் கொண்டு, கூட்டணியின் நலனையும் கருத்தில் கொண்டு தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். நாங்கள் இந்த கூட்டணியில் தான் இருப்போம். தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க. கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது. பாட்டாளிமக்கள் கட்சி விவகாரம் அவர்களது உட்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து செல்வதற்கு ஒன்றுமில்லை. தமிழ் இன உணர்வாளர்களை சனாதன சக்தியாக மாற்றுவதற்கு கவர்னர் முயற்சிக்கிறார். முருக பக்தர்களை பா.ஜ.க. ஆதரவாளராக மாற்றுவதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. இவர்களுக்கான கோரிக்கை அரசியல் ஆதாயம் என்பது தான் மாநாட்டின் நோக்கம். அப்படித்தான் வள்ளுவரையும் சனாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். உங்கள் முயற்சி ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாடு ஏற்கனவே பண்படுத்தப்பட்ட, பக்குவப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாக தான் இருப்பார்கள். ஐயப்ப பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாகதான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது. ஆதாயம் தேட முடியாது என்று தெரிவித்துள்ளார்.