மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை - பிரேமலதா கண்டனம்!!

premalatha
மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று இரவிலிருந்து. மின் கட்டண உயர்வு செய்துள்ளனர் என்ற செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இது மொத்தமாக மக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு விஷயமா இருக்கும். எனவே அரசு மறு பரிசீலனை செய்து இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு மின் கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்? மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாகத் தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மின் நுகர்வோர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.