எதிர்க்கட்சி ஆட்சியில் முதலமைச்சர் பொறுப்பு... இவர்கள் ஆட்சியில் அதிகாரிகள் பொறுப்பு: தமிழிசை

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலீசாரால் அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தம்பி, எனக்கு பாதுகாப்பு மட்டும் கேட்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் மிரட்டப்படுகின்றனர் என்று கூறி உள்ளார். அப்படியென்றால் இதில் மிரட்டுபவர் யார்? யார் அந்த சார்? இந்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டி, அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று அஜித் குமாரை கடுமையாக தாக்கச்சொன்ன சார் யார்? சென்னையில் இருந்துதான் அவர்களுக்கு ஆணை வந்ததாக சொல்கிறார்கள். அப்படியென்றால் யாரின் நடவடிக்கையின்பேரில், யாரின் ஒப்புதலின்பேரில், யாரின் அறிவுறுத்தலின்பேரில் கடுமையான விசாரணை நடத்தப்பட்டது. 25 வயதில் வீரியமாக அடித்துக்கொண்டிருக்கும் இதயம் நிறுத்தப்படுகிறது என்றால் எவ்வளவு கொடுமையை அந்த உடம்பு அனுபவித்து இருக்கும். எந்த விசாரணையும் காவல்நிலையத்தில் நடக்கவில்லை. சாரி சொன்னால் போதுமா... எவ்வளவு ஒரு வேதனையான விஷம். தேனியில் இன்னொரு சம்பவம் வெளி வருகிறது. காவல் நிலையத்தில் உண்மை வெளிவருகிறதா? உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறார்களா? தமிழகம் முழுவதும் இது ஒரு மாடலாக இருக்கிறதே என்று மிகமிக கவலையாக உள்ளது. எங்கெங்கு இருந்து எந்தெந்த சாரிடம் இருந்து ஆணைகள் வந்துகொண்டிருக்கிறது என்று நமக்கு தெரியவில்லையே. தனிப்படையை கூலிப்படை போல் நீங்கள் பயன்படுத்தி வந்தீர்கள் என்று தானே அர்த்தம். விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு துணைபோய்க்கொண்டிருந்த சிறப்பு காவல்படை நீக்கப்படுகிறார்கள் என்று டிஜிபி சொல்கிறார். அஜித்குமாரை தாக்கிய அனைவருக்குமே கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழக அரசு இதை தீவிரமாக சிந்திக்க வேண்டும். எல்லோரும் ஒரு அழுத்தத்தில் பணியாற்றி வருகிறார்கள். த.வெ.க. தலைவர் சென்று பார்த்ததை ஒரு ஸ்டண்ட் என்று சொல்லும் அளவிற்கு கீழ்த்தரமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் கட்டாயம் சென்று இருக்க வேண்டும். எதிர்க்கட்சி ஆட்சி செய்யும்போது முதலமைச்சர் பொறுப்பு. இவர்கள் ஆட்சி செய்யும்போது அதிகாரிகள் பொறுப்பு என்று அவர் கூறினார்.