தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை; ‘இன்சியல் மட்டும் போட்டு கொள்ளலாம்’என் பெயரை பயன்படுத்தக் கூடாது: அன்புமணிக்கு ராமதாஸ் அதிரடி தடை

Ramadoss and Anbumani
என் பெயரை பயன்படுத்தாமல், இன்சியல் மட்டும் போட மட்டுமே உரிமை உள்ளது என்று அன்புமணிக்கு, ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இதனால் இருவரும் பாமகவுக்கு நான்தான் தலைவர், மாழ்பழம் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று இருவரும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பாமக, வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பட்டாளி மக்களுக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. இங்கே ஒரு செய்தியை சொல்ல வேண்டும். ஐந்து வயது குழந்தையை போல இருக்கிறீர்களா நீங்கள் என்று என்னிடம் ஒருவர் கேட்டார். அப்படி என்றால் அந்த குழந்தை தான் மூன்று வயசாக இருக்கும்போது, மூன்று வருடங்களுக்கு முன்பு அவரை தலைவராக ஆக்கியது. நான் இப்போது சொல்கிறேன். என் பெயரை யாரும் போடக்கூடாது. என்னுடைய பெயரின் முதல் எழுத்து (இனிஷியல்) மட்டும் (அன்புமணி) போட்டு கொள்ளலாம். ஆனால் என் பெயரை போட்டுக்கொள்ள கூடாது. ஏனென்றால் என் பேச்சை கேட்கவில்லை என்றால் என்ன ஆவது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ராமர் வனவாசம் போகும்போது தசரத சக்கரவர்த்தி ஆணையிடுகிறார், 16 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்று. அப்போது ராமரின் முகம் அன்று பூத்த செந்தாமரை போன்று இருந்ததாம். ஆனால் நாம் என்ன சொல்கிறோம். செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். ஆகவே இதனை கும்பகோணத்தில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பிரம்மாண்டமாக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 2 லட்சம் பெண்கள் கூடுகிறார்கள். அதுபோல அனைவரும் வரவேண்டும் என்று உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (55). பாமக முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளரான இவர், கடந்த 8ம் தேதி தனது காரை கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை மேம்பாலம் அருகே நிறுத்தி விட்டு, காவேரிப்பட்டணம் முன்னாள் எம்எல்ஏ மேகநாதனின் காரில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்திற்கு சென்றார். பின்னர், நேற்று முன்தினம் காலை, கிருஷ்ணகிரிக்கு திரும்பினார். அப்போது, மேம்பாலம் அருகே நிறுத்தியிருந்த அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்திற்கு தான் சென்றதால், அன்புமணியின் ஆதரவாளரான கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக செயலாளர் மோகன்ராஜ், தனது ஆதரவாளர்களுடன் வந்து எனது காரின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். பாமகவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு நேரடியாக வர வேண்டாமென ராமதாஸ் வெளிப்படையாக கூறிவந்தார். ஆனால் அன்புமணி தனது மனைவி சவுமியாவை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கினார். தனக்கு விருப்பமில்லை என்றாலும் இந்நிகழ்வு நெருக்கடியான சூழலில் நடந்தேறியதாக ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். தந்தை, மகன் மோதல் நீடித்த நிலையிலும் சௌமியா, ஊர் ஊராக சென்று கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து பாமகவில் தனது மூத்த மகளான காந்திமதியை முன்னிலைப்படுத்தும் முடிவுக்கு ராமதாஸ் திடீரென வந்துள்ளார். சவுமியாவுக்கு போட்டியாக காந்திமதியை அரசியலில் தீவிரமாக களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தனக்கு எதிராக செயல்படும் மகன் அன்புமணிக்கு குடும்ப விவகாரத்திலும், கட்சியிலும் நேரடியாக செக் வைக்க முடியும் எனவும் ராமதாஸ் கருதுவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.