ஆசை காட்டி மோசம் செய்வது தான் திமுகவின் கொள்கை! மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்: அன்புமணி

Anbumani
பட்ஜெட் அறிவிப்புகளில் பாதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 256 திட்டம் சாத்தியமில்லை. மக்களை ஏமாற்றுவதே திமுகவின் கொள்கை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட 5 நிதிநிலை அறிக்கைகளில் வெளியிடப்பட்ட 8634 அறிவிப்புகளில் இதுவரை பாதி மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மீதமுள்ளவற்றில் பெரும்பான்மையான அறிவிப்புகளுக்கு அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், 256 திட்டங்கள் சாத்தியமற்றவை என்று கைவிடப்பட்டு விட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. சாத்தியமற்ற திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதே திமுகவின் கொள்கை என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021-22ஆம் ஆண்டில் தொடங்கி 2025-26ஆம் ஆண்டு வரை மொத்தம் 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 8634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் மரபு. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டுக்கும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அவற்றில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 4516 மட்டுமே, அதாவது 52.30% மட்டும் தான் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 3455 (40%) அறிவிப்புகளுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 236 திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டும், அவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை என்றால் அத்திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டு விட்டன என்று தான் பொருள் ஆகும். அதேபோல், 2022&ஆம் ஆண்டில் 394 திட்டங்களும், 2023&ஆம் ஆண்டில் 593 திட்டங்களும், 2024ஆம் ஆண்டில் 941 திட்டங்களும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் கிடக்கின்றன. நடப்பாண்டில் கூட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்ட 1827 திட்டங்களில் வெறும் 193 திட்டங்கள் மட்டும் தான் கடந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1291 திட்டங்களுக்கு அரசாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 256 திட்டங்கள் சாத்தியமற்றவை என்று அடையாளம் காணப்பட்டு கைவிடப்பட்டு விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓர் அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் எந்தவொரு திட்டமும் போகிற போக்கில் சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் அதற்காக சம்பந்தப்பட்ட துறையின் கள அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை பல நிலைகளில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தான் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்பட்ட திட்டங்கள் சாத்தியமற்றவை என்று இப்போது தான் தெரியவந்ததாகக் கூறுவது ஏற்க முடியாது. திமுகவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இவையெல்லாம் அதிர்ச்சி அளிக்காது. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளிப்பதும், பின்னர் அவை சாத்தியமற்றவை என்று கூறி நழுவுவதும் திமுகவின் இயல்பு தான். அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு நீட் தேர்வு. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் விலக்கு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நீர் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மேடைக்கு மேடை முழங்கினார்கள். அதன் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அவர்கள், நான்கரை ஆண்டுகள் கடந்த பிறகு இப்போது நீட் தேர்வை தங்களால் ரத்து செய்ய முடியவில்லை என்றும், மத்தியில் திமுக பங்கேற்கும் ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறி கைகழுவுகின்றனர். நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, மாதாந்திர மின் கட்டணம், பேருந்துகட்டணம் குறைப்பு, சமையல் எரிவாயுவுக்கு மானியம், நியாயவிலைக்கடையில் உளுந்து என தேர்தலின்போது வாக்குறுதி அளித்து, மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிய பிறகு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை 373. தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றாமல் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறதோ, அதேபோல் தான் நிதிநிலை அறிக்கையிலும் ஏராளமான திட்டங்களை அறிவித்து, அவற்றை சாதனையாகக் காட்டி, பாராட்டு விழாக்களையும் நடத்தி விட்டு, இப்போது 256 திட்டங்களை சாத்தியமற்றவை என்றும், 3455 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. ஆசை காட்டி மோசம் செய்வது தான் திமுகவின் கொள்கை. அதை மீண்டும் ஒரு முறை திமுக நிரூபித்திருக்கிறது. திமுகவின் மோசடிக் கொள்கையை இப்போது நன்றாக புரிந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். அடுத்த 6 மாதங்களில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.