கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைக்கும் விஜய்; அதிருப்தியில் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள்!!

vijay
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த தவெக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து விஜய் அந்த பகுதியில் இருந்து வேகமாக புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் வீடியோ காலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கரூரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்வதற்கு பதிலாக கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் அவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் சொல்வார் என்றும் அப்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த பணத்தையும் அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டமிட்டிருந்ததாக முதலில் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். அவர்களுக்காக 50-க்கும் மேற்பட்ட அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 27 ஆம் தேதி இந்த சந்திப்பு நடக்கலாம் என சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து திருப்பி கொண்டு போய் சேர்ப்பது வரை ஆகும் செலவுகளை தவெக ஏற்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து, விடுதியில் தங்க வைத்து விஜய் சந்திப்பது சிபிஐ விசாரணையில் பாதிப்பை உருவாக்கும் என விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
