தி.மு.க.வின் பி டீம் தான் ஓ.பி.எஸ், டி.டி.வி: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் எதிராக உள்ளனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை செங்கோடையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன், துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி.துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை. சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார். அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும்.ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம் என்று அவர் கூறினார். இந்நிலையில், மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, துரோகிகளாகல் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் திமுகவின் பி டீம். பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களைகள் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும் என்றார்.
